Search This Blog

Friday 3 January 2020

தூசியைப் போல

இன்றும், நமக்குகிடைத்த உறவுகளை நாம் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இக்குட்டிக்கதை மூலம் காண்போம்.

ஜெபராஜும் அருணும் நண்பர்கள். வகுப்பில் இருவருக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெபராஜ் மீதுதான். அதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்களாகவே தனியாகப் பள்ளி செல்லும் அருணிடம் காரணம் கேட்டார் அம்மா. அவன் நடந்ததைக் கூறினான்.

“என் கணக்கு நோட்டை ஜெபராஜ் வாங்கிட்டுப் போனான். மறுநாள் பள்ளிக்கு நோட்டைக் கொண்டு வர மறந்துவிட்டான். அதனால் கணித வகுப்பு முழுவதும் நான் வெளியில் நின்றேன். செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்த கோபத்தில் அவனைத் திட்டினேன். அதிலிருந்து அவன் என்னுடன் பேசுவதில்லை… நானும் பேசவில்லை…’ என்றான் அருண்.

“உன்னோட நண்பன் தானே! நீதான் விட்டுக் கொடுத்துப் போகக்கூடாதா?’ என்றார் அம்மா.

“தப்பு செய்த அவனே என்னிடம் பேசாமல் இருக்கும்போது, நான் ஏன் அவனிடம் பேச வேண்டும்?’ என்று எதிர்க்கேள்வி கேட்டான் அருண்.

“சரி, உங்க சண்டையை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு உங்க தாத்தா, பாட்டி வர்றாங்க. பரண் மேலே போட்டு வச்சிருக்க பாத்திரங்களை எடுத்துக் கொடு. நாளைக்குத் தேவைப்படும்’ என்றார் அம்மா.

நாற்காலி ஒன்றைப் போட்டு, அதன் மேல் எறி நின்று ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துக் கொடுத்தான் அருண்.

“அய்யோ! பாத்திரமெல்லாம் ஒரே தூசியாய் இருக்கிறது. இப்ப என்ன பண்றது?’ வருத்தம் மேலிடக் கேட்டார் அம்மா.

“இதுல என்னம்மா பிரச்னை? தூசியைத் துடைத்துவிட்டு, கழுவி பயன்படுத்த வேண்டியதுதானே!’ என்றான் அருண்.

“அதே மாதிரிதான் உன் நல்ல நண்பன். தூசியைப் போல சின்ன தவறு செஞ்சிட்டான். அதை மன்னித்துப் பேச வேண்டியதுதானே!’ என்றார் அம்மா.

அருணுக்குத் தனது தவறு விளங்கியது.

“சரியாச் சொன்னீங்க அம்மா! சின்ன தவறுக்காக நல்ல நண்பனை இழக்க இருந்தேன். இப்பவே ஜெபராஜ் வீட்டுக்குப் போய் வீட்டுப் பாடம் எல்லாம் செஞ்சிட்டு வர்றேன்’ என்றபடி உற்சாகமாக ஓடினான் அருண்.

என் அன்பு வாசகர்களே,
இவ்வுலகத்தில் பணம், பொருள் எல்லாவற்றையும் சம்பாதித்து விட முடியும் ஆனால் நமக்கு கிடைக்கின்றன நம்பிக்கையான உறவுகளை அவ்வளவு எளிதில் சம்பாதித்து விட முடியாது. நமது சம்பாத்தியம், பணம், பொருள் எல்லாம் ஒரு நாளில் நம்மை விட்டு விலகினாலும் நம்மை உண்மையாய் நேசிக்கிற உறவுகள் எத்தனை கஷ்டம் வந்தாலும் நம்மைவிட்டு பிரியாது.

ஒருவரது நட்பையாவது உறவையாவது முறித்து விடுவது எளிது அதுவே அந்த நட்பை வளர்த்துக் கொள்வது மிகவும் கடினமான விஷயம். 

தேவனும் நம் மீது அன்பு கொண்டபடியால் தான் நம்மீது பாவம் இருந்த போதும் அதை பொருட்படுத்தாது இவ்வுலகில் வந்து நமக்காய் மரித்து மீண்டும் உயிரோடு எழுந்து நம்மை பரலோகில் சேர்க்க மீண்டும் வரப்போகிறார். எனவே நாம் அவரை எதிர்க்கொண்டு போக மற்றவர் மீது அன்போடும் அரவனைப்போடும் வாழ்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:4 - 8

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!


No comments:

Post a Comment