Search This Blog

Tuesday 7 January 2020

பலவீனமே பலம்

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பல தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார். அந்நாட்களில் மனதை ஒருமுகப்படுத்த துறவிகள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

மன்னரின் படையில் சேர்வதற்குத் தற்காப்புக் கலைகளை அறிந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் பல இளைஞர்களும் அத்துறவியிடம் தற்காப்புக் கலைகளைப் பயின்றுவந்தனர். இப்படி இருக்கையில் ஒருநாள் “ஹைக்கோ’ என்ற பெயருடைய ஒருவன் தான் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகத் துறவியிடம் கூறி அவரை வணங்கி நின்றான். அவன் மிகவும் நோஞ்சானாக இருந்தான். அவனது இடது கை மிகவும் சிறியதாக, முழு வளர்ச்சி இல்லாமல் மெலிந்து காணப்பட்டது.

இதைக் கண்டு அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்த பிற இளைஞர்கள் உரக்க சிரித்து, ஏளனம் செய்தனர். அவர்களை அத்துறவி கண்டித்தார். ஹைக்கோவின் நிலை கண்டு மனமிரங்கிய துறவி, அவனுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருவதாக ஒப்புக்கொண்டார். துறவி இருக்கும் வரை அவனிடம் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் அவர் அங்கிருந்து சென்றபிறகு பிற இளைஞர்கள் அவனை மிரட்டி வேலை வாங்குவர். “உனக்கு ஏனிந்த வீண் வேலை? நீயெல்லாம் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறாய்?’ என்று கேட்டு அவனை அவமானப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

ஹைக்கோ அனைத்தையும் பொறுத்துக் கொண்டான். பிறர் உழைப்பதைக் காட்டிலும் இருமடங்கு உழைத்தான். துறவியும் அவனுக்குப் பரிவுடனும் பொறுமையுடனும் கற்றுத் தந்தார். நாட்கள் பல சென்றன.

திடீரென்று ஒருநாள் குதிரையில் வந்த சிலர் இவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் கொள்ளையர்கள் என்பதைப் புரிந்து கொண்டார் துறவி. அந்நாட்களில் கொள்ளையர்கள் திடீரென்று சில இடங்களுக்குச் சென்று பொருட்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் அத்தோடு நில்லாமல் தாம் கொள்ளையடிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்களை அடிமையாக்கித் தம்முடன் அழைத்துச் சென்று விடுவர்.

கொள்ளையர்களின் தலைவன் போல் இருந்த ஒருவன் அனைவரையும் சரணடையுமாறும், அங்குள்ள பொருட்கள் யாவும் தனக்கே சொந்தம் என்றும் கூறினான்.

இதை கவனித்துக் கொண்டிருந்த துறவி, “”உன்னால் முடிந்தால் என் சீடர்களை வீழ்த்திவிட்டு இங்குள்ள பொருட்களை நீ கவர்ந்து செல்லலாம்!” என்றார்.

துறவியிடம் இதுவரைப் பாடம் பயின்றுவந்த இளைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட இதுவே தக்க தருணம் என நினைத்தனர். கொள்ளையர்களின் தலைவன் தன் கூட்டத்தில் இருந்த வீரர்களுள் சற்று உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தான். பின் கொள்ளையர்களின் தலைவன், துறவியின் சீடர்களிடம், "நீங்கள் என்னை மட்டும் வீழ்த்திவிட்டால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிடுகிறோம். அப்படி வீழ்த்தத் தவறினால் இந்த இடமும் இங்குள்ள பொருட்கள் யாவும் எனக்கே சொந்தம். உங்கள் குரு உட்பட நீங்கள் யாவரும் எங்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிய வேண்டும். சம்மதமா?” என்றான்.

இதைக் கேட்ட துறவியின் சீடர்கள் கொதித்து எழுந்தனர். துறவி முதலில் ஒரு சீடனை சண்டையிட அனுப்பினார். சண்டை மிகக் கடுமையாக நடைபெற்றது. ஆனால் கொள்ளையர்களின் தலைவன் துறவியின் சீடனை வீழ்த்தினான். அடுத்து ஒரு சீடன் வந்தான். அவனையும்  கொள்ளையர்களின் தலைவன் மிக எளிதாக வீழ்த்தினான். இப்படியாக ஒன்பது சீடர்களை துறவி அனுப்ப, அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட்டு அசராமல் மலை போல் நின்றான் கொள்ளையர்களின் தலைவன்.

இப்பொழுது கொள்ளையர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். “”உன் சீடர்களின் லட்சணம் தெரிந்துவிட்டது அல்லவா? இன்னும் யாராவது சீடர்கள் இருக்கிறார்களா? அல்லது நீயே சண்டைக்கு வருகிறாயா?” என்று துறவியைப் பார்த்துக் கேட்டான், கொள்ளையர் தலைவன். இவையனைத்தையும் சற்றும் பதட்டமில்லாமல் கவனித்துக் கொண்டிருந்த துறவி அடுத்ததாக ஹைக்கோவை சண்டையிடுமாறு கட்டளையிட்டார். ஹைக்கோவும் ஆர்வத்துடன் முன்வந்தான்.

இப்பொழுது துறவியின் பக்கம் இருந்த ஒன்றிரண்டு சீடர்களும், “”நம் குருநாதருக்கு என்ன நேர்ந்தது? அவனை வீழ்த்தப் போயும் போயும் இந்த நோஞ்சான் பயலை அனுப்புகிறாரே! அவன் ஒரே அடியில் இவனைக் கொன்றுவிடுவான். நாம் இருப்பது அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று பதட்டத்துடன் பேசிக் கொண்டனர்.

ஹைக்கோவைக் கண்ட கொள்ளையர்கள் கைகொட்டிச் சிரித்தனர். சண்டை ஆரம்பமானது. கொள்ளையர்களின் தலைவன், ஹைக்கோவைப் பிடித்து இழுக்கும் முன்னரே, ஒற்றைக் கையைத் தரையில் ஊன்றி பல்டி அடிக்க ஆரம்பித்தான் ஹைக்கோ. எப்படி முயன்றும் கொள்ளையர்களின் தலைவனால்  ஹைக்கோவைப் பிடிக்கமுடியவில்லை. அந்தக் காட்சி, கொசுவைப் பிடிக்க யானை போராடுவது போல் இருந்தது. இப்படியே பலமணி நேரம் தன் மேல் ஓர் அடி கூட விழாமல் ஹைக்கோ பார்த்துக் கொண்டான்.

இதனால் கொள்ளையர்களின் தலைவன் வெகு விரைவில் சோர்ந்துவிட்டான். இப்பொழுது கொள்ளையர்கள் முகத்தில் கலவரம் தோன்ற ஆரம்பித்தது. இத்தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஹைக்கோ மின்னல் போல் பாய்ந்து கொள்ளையர்களின் தலைவனைத் தாக்கினான். இத்தாக்குதலால் நிலைகுலைந்த கொள்ளையர்களின் தலைவன் பேச்சு மூச்சற்றுக் கீழே விழுந்தான். இப்பொழுது துறவியின் எஞ்சியிருந்த சீடர்கள் பலத்த கரவொலி எழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கொள்ளையர்களின் தலைவனால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த வீரர்களும் நினைவு திரும்பி ஒருவாறு மீண்டு எழுந்தனர்.

இதைக் கண்ட கொள்ளையர்கள் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு, துறவி முன் மண்டியிட்டு, “”நீரே உண்மையான குரு!” என்று கூறி வணங்கிப் பின் அங்கிருந்து சென்றனர்.

இப்பொழுது சீடர்களுள் ஒருவன், “”நீங்கள் முதலிலேயே ஹைக்கோவை அனுப்பி இருக்கலாம் அல்லவா…?” என்றான். அதற்குத் துறவி, “”அவன் சண்டை இடும் முறையைக் கூர்ந்து கவனிக்க எனக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. அவன் ஒவ்வொரு முறை உங்களைத் தாக்கும் பொழுதும் உங்கள் இடது கையைப் பற்றி இழுத்துத் தாக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தினான். ஆனால் ஹைக்கோவின் இடது கை முழு வளர்ச்சி இல்லாமல் இருந்ததால் அவனால் பற்றி இழுக்க முடியவில்லை! உங்களால் இரு கைகளையும் தரையில் ஊன்றினால் மட்டுமே எம்பிக் குதிக்க முடியும். ஆனால் ஹைக்கோவால் தன் ஒரு கையைத் தரையில் ஊன்றிக் குதிக்க முடிந்ததால், அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கொள்ளையர்களின் தலைவன் வீழ்ந்தான்!” என்றார்.

இதுவரை ஹைக்கோவின் இயலாமையை ஏளனம் செய்துவந்த இளைஞர்கள் வெட்கித்தலைகுனிந்தனர். ஹைக்கோவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

தம் குருநாதர் முன் மண்டியிட்டுத் தலை வணங்கி அனைவரும் ஒரே குரலில் கூறினர், “”நீரே உண்மையான குரு!”

ஆம்! இயலாமை என்றும் பலவீனம் என்று நாம் நினைப்பவை ஒருநாள் பலமாக மாறும்!

என் அன்பு வாசகர்களே,
உடல் பலம் மாத்திரமல்ல மன பலம் இருந்தால் மட்டும் தான் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் நிலைத்து நிற்க முடியும் என்பதே இக்கதையின் கருத்து.

உடல் பலம் மிக்கவர்கள் மற்றவர்களை பரியாசம் பண்ணி ஏளனம் செய்து அவர்களை நகையாடுவர் ஆனால் இறுதியில் யாரை ஏளனம் செய்தார்களோ‌ அவர்கள் மூலம் தான் அவர்கள் காரியம் நிறைவேறும்.

இக்கதையின் சம்பவம்போலவே வேதத்தில் ஒரு சம்பவம் உண்டு. கோலியாத் இஸ்ரவேலரின் பாளையத்தில் வந்து நின்று இஸ்ரவேலரை நிந்தித்த பொழுது தாவீது இஸ்ரவேலருக்காக யுத்த செய்ய போனான். அவனை இஸ்ரவேலர் முதற்கொண்டு அந்த பெலிஸ்தன் வரை எல்லோரும் பரியாசம் செய்தனர் இறுதியில் அவனைக் கொண்டு தேவன் இஸ்ரவேலுக்கு மிகப்பெரிய இரட்சிப்பை கொடுத்தார்.

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 
1 கொரிந்தியர் 1:27, 28

எனவே நாம் மற்றவர்களை இழிவாக எண்ணாதபடி நம்முடைய பலவீனங்களிலும் நம்மை தேவன் ஏற்றுக்கொண்டது போல நாமும் நம்மைவிட பலவீனமானவர்களை ஏற்றுக்கொள்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!



Monday 6 January 2020

ஒரே பொருள்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஸ்தானத்தில் வைத்திருப்போம். அந்த ஸ்தானத்திற்கு ஏற்ற மரியாதையை கொடுத்துக்கொண்டே இருப்போம். ஆனால் சிலர் மீதோ அளவுகடந்த பாசமும் அவர்கள் என்ன சொன்னாலும் செய்துமுடிக்க கூடிய தைரியமும் உண்டாயிருக்கும் வேறு சிலர் மீதோ வேண்டாத வெறுப்பும் அவர்களை கண்டால் ஏளனமும் உண்டாகும். 

அப்படி ஒருவர் மீது பட்சமாய் இருப்பதினாலும், தனது சொந்த பிள்ளைகளை, பெற்றோரை, உறவினரை நம்பாது மூன்றாம் நபர் மீது அதிக அன்பும் அக்கறையும் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதை மூலம் காண்போம்.

முன்னொரு காலத்தில், அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே அவருக்கு வணிகத்தில் உதவி செய்தனர். ஆனால், அவரோ தன் நம்பிக்கைக்கு உரிய அடிமை சொல்வதைக் கேட்டு நடந்தார். அந்த அடிமையின் அறிவுரைப்படி நடந்ததால்தான் தன் செல்வம் மேலும் மேலும் பெருகியது என்று நினைத்தார்.

தன் மகன்களைவிட அந்த அடிமைக்கு அதிக மதிப்புக் கொடுத்து வந்தார். கடும் நோய்வாய்ப்பட்ட செல்வந்தர் படுத்த படுக்கையாகக் கிடந்தார். வஞ்சகனான அந்த அடிமை தன் விருப்பம் போல அவரை உயில் எழுதச் செய்தான். சில நாட்களில் செல்வந்தரும் இறந்துவிட்டார்.

அவருடைய உயிலைப் படித்தனர். அதில், “இந்தச் செல்வம் முழுவதும் நானே ஈட்டியது. என் விருப்பம் போலச் செலவு செய்யும் உரிமை எனக்கு உள்ளது. என் மூன்று மகன்களும் என் செல்வத்தில் இருந்து அவர்கள் விரும்பும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாம். மீதி உள்ள என் செல்வங்கள் அனைத்தும் என் நம்பிக்கைக்கு உரிய அடிமைக்குச் சேர வேண்டும்’ என்று எழுதியிருந்தது.

“இந்த செல்வந்தர் தன் மகன்களை இப்படி ஏமாற்றி விட்டாரே!’ என்று எல்லாரும் வருந்தினர்.

மூத்த மகன், “”விலை உயர்ந்த மாளிகையை நான் எடுத்துக் கொள்கிறேன்…” என்றான்.

அவன் பெயருக்கு அந்த மாளிகை எழுதப்பட்டது.

இரண்டாவது மகன், செல்வந்தருக்கு சொந்தமான வியாபாரத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.

நடப்பதை எல்லாம் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த அடிமை. அவனுக்குக் கிடைக்க இருக்கும் பெருஞ்செல்வத்தை எண்ணி எல்லாரும் பொறாமை கொண்டனர்.

கடைசி மகனைப் பார்த்து, “”உன்னுடைய விருப்பம் என்ன? எந்தப் பொருள் வேண்டும்?” என்று கேட்டனர் பெரியவர்கள்.

“இவன் எந்தப் பொருளைக் கேட்டாலும் மீதி உள்ள பொருட்கள் அனைத்தும் எனக்கே சொந்தம். இனி இந்த நாட்டில் நானே பெருஞ்செல்வந்தன்!’ என்ற மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அந்த அடிமை.

அறிவுக்கூர்மை உடைய அந்த மகன், “”என் தந்தைக்கு அடிமையாக இருந்த நீ எனக்கும் அடிமையாக இருக்க வேண்டும். இவரே நான் தேர்ந்து எடுக்கும் ஒரே பொருள்…” என்றான்.

அந்த அடிமை, அவனுக்கு அடிமையானதால் எல்லாச் செல்வமும் இளைய மகனுக்கே உரியது ஆயிற்று. தன்னுடைய கெட்ட புத்திக்கு கிடைத்த பரிசை எண்ணி நொந்துபோனான் அடிமை!!!

என் அன்பு வாசகரே,

இச்சம்பவம் போன்று தான் இன்றைய காலக்கட்டத்தில் நடந்துவருகிறது. தன் பிள்ளைகளை, பெற்றோரை, உறவினர்களை மறந்து மூன்றாம் நபரிடத்தில் சென்று ஏமாற்றப்பட்ட பின்னர் தான் உணர்ந்து கொள்கிறார்கள். அதற்கு காரணம் வீட்டில் உள்ள பெரியவர்களே. அவர்கள் பிள்ளைகளோடு தங்கள் நேரங்களை செலவிடாது தங்கள் காரியங்களை மட்டுமே நோக்குகின்றனர். 

அதனால் மூன்றாம் நபர் அந்த இடத்தில் புகுந்து உங்கள் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார். இது குடும்பத்தில் மட்டுமல்ல வேலை ஸ்தலங்களில், ஊழியங்களிலும் நடைபெறுகிறது. 

நமது மூத்த ஊழியரிடம் அல்லது நமது உயர் அதிகாரிகளிடம் நாம் நேரடியாக பேசுவதற்கு பதிலாக வேறொரு நபரை நாம் ஏற்படுத்தி விடுகிறோம். அப்படி செய்வதினால் நமக்கும் அவருக்கும் இருக்கின்ற இடைவெளி இன்னும் அதிகாமகிறது. நமக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தை அவர் பெற்றுக்கொள்கிறார்.

எனவே நாம் மூன்றாம் நபராக அல்ல அவருடைய சொந்த பிள்ளைகளாய் அவருடைய சுதந்திரத்தை அனுபவிப்போம்.

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!


Sunday 5 January 2020

அன்பும் கண்டிப்பும்.

மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!

தன் மகனை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவன் தகப்பனிடம் கேட்டான் ... ஏன் அப்பா  என்னை எப்பவும் இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவனுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...

ஒரு நாள் மகன் தன் தகப்பனிடம் வந்து கேட்டான் .. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான் ...

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தான் ... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னடா ??? என கேட்டார்...

மகன் பட்டென பதில் சொன்னாள், இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னான் ...

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

இதேபோலத்தான்  உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகன் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டான்...!!!

என் அன்புக்குாியவா்களே, ..  மகன் மட்டுமல்ல யாராயிருந்தாலும்  நூல் என்ற பாதுகாவலாக  தேவன் இருக்கிறார். மனைவிக்கு புருஷன்  இருப்பது போல், பிள்ளைகளுக்கு பெற்றோா், வேலை செய்கிறவா்களுக்கு மேல் அதிகாரிகள்,  சபை விசுவாசிகளுக்கு  போதகராகிய மேய்ப்பன்  இப்படி எல்லா நிலையில் இருக்கிற அனைவருக்கும் கண்டிப்புடன் நடத்தும்படி  நூலாகிய ஒருவரை வைத்துள்ளாா்.  

அப்போதுதான் பட்டமாகிய நாம் கழுகுகளை போல் உயரமாய் எல்லாவற்றுக்கும் மேலாக பறக்க முடியும். அன்பு நிறைந்த  கண்டிப்பு எங்கே உள்ளதோ அங்கே சாதனைகளையும்,  உயா்வுகளையும், மேன்மையையும்   அடுத்தடுத்து பாா்க்க முடியும். 

உங்களுக்கு மனதும், மாம்சமும் விரும்பும்  இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது..

எனவே  உங்களை கண்டிப்பவருக்குக்  கீழ்படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!

அன்பு எங்கேயோ அங்கே தான் கண்டிப்பும் இருக்கும். அன்பு மட்டும் உங்களை கண்டிப்பவாிடத்தில் இல்லாமலிருக்குமானால்  அவர் மனதில் அவன் எக்கேடு  கெட்டு போகட்டும் நமக்கென்ன, பட்டாதான் புத்தி வரும். என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும்.    

கண்டிக்கும்போது அதற்கு கீழ்படிந்து அடங்காமல்  அவர்களுக்கு விரோதமாய்  எழும்புவதும்,  ஒரு படையை திரட்டி அவர்களை குற்றம் சாட்டுவதுமாய் சண்டை போடுவதுமாய் இருக்கிறவா்கள். இது வரை சாதித்தவா்களாகவோ, மேன்மை அடைந்தவா்களாகவோ சரித்திரம் இல்லை. 

அவர்கள் பாதாளத்தில் இருக்கிறதுபோல் தான் வாழ்க்கையின் அடிமட்டத்தில்  வீழ்ந்து கிடக்கிறார்கள் அவர்களை சீந்துவாாில்லாமல் ஏதோ வாழ்கிறார்கள்.  

பைபிள் சொல்கிறது நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாய்  இருந்தோம். 

தேவனோ இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்  (எபே. 2:3-5)


அன்பும், கண்டிப்புமுள்ள கணவனும்,பெற்றோரும்,மேலதிகாிகளும், நல்ல சபை போதகரும், பாிசுத்தவான்களும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். அது ஒரு வரம் என்றே சொல்லலாம். பட்டம் நூலுடைய கட்டுப்பாட்டில் இருந்து உயர பறக்கிறது போலுள்ள  நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமைவதாக! 

இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமை உள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.  (1 பேதுரு 5:5,6)

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். ரோமர் 13:1,2

மேற்கண்ட வேதவசனம் சொல்கிறபடி நடவுங்கள் அதனால் யாருமே எட்டாத உயரத்திற்கு தேவன் உங்களை கொண்டு செல்லுவாா். 

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!


Saturday 4 January 2020

நகரம்யா!

ராசு தாத்தாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை விட்டு வெகு தொலைவு விலகியிருந்தது. நவீன கால நாகரிக வாடை அந்தக் கிராமத்துக்கு இன்னும் எட்டவில்லை. ரயில் – பஸ் போன்றவற்றை இந்தக் கிராம மக்களில் பெரும்பான்மையினர் பார்த்ததே இல்லை.

ராசு தாத்தாவின் பேரப் பிள்ளைகள் பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு பட்டணத்தில் இருந்தனர். அவர்களுடைய அழைப்பின் பேரில் நகரத்துக்கு வந்திருந்தார்.

ஒரு மனிதனால் 98 வயது வரை வாழ முடியும் என்ற விஷயமே நகர்ப்புற மக்களுக்கு ஒரு அதிசயம். நவீன நகரங்களில் 60 வயதுக்கு மேல் வாழ்வோர் அரிது. அனேகமாக 50 வயது நடப்பதற்குள்ளே மக்கள் மரணமடைந்து விடுவது வழக்கம்.

நகரத்துக்கு 98 வயது மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை ஏதோ ஒரு அற்புதம் போலக் கருதிய நகர மக்கள் தாத்தாவை வேடிக்கை பார்க்கவும், அவருடன் உரையாடவும் அடிக்கடி வரத் தொடங்கினர். பத்திரிகை நிருபர் ஒருவர் ராசு தாத்தாவைப் பேட்டி காண வந்தார். நிருபர் தாம் வந்ததன் நோக்கத்தை விவரிக்கக் கேட்டதும், தாத்தா ஆச்சர்யம் அடைந்தார்.

“”என்னைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதனால் உங்கள் வாசகர்களுக்கு என்ன லாபம்?” என்று கேட்டார் தாத்தா.

“”எங்கள் நகரப் பகுதியில் ஒரு மனிதர் 98 வயது வரை வாழ்வது என்பது பெரிய அதிசயம்!” என்றார் நிருபர்.

தாத்தா கலகலவென்று நகைத்தார்.

“”ஒரு மனிதன் அதிக நாள் வாழ்வது அவ்வளவு அதிசயமா? எங்கள் கிராமத்தில் நூறு வயதுக்கு மேல் வாழும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனரே!” என்றார்.

“”அது எங்களுக்கெல்லாம் அதிசயத்திலும் அதிசயமாகும். எங்கள் நகர் புறங்களில் 50 வயது வரையில் வாழ்வதே பெரிய விஷயம்!” என்று கூறினார் நிருபர்.

பிறகு பேட்டியைத் தொடங்கினார்.

“”தாத்தா அவர்களே! எங்கள் நகர்ப்புற வாழ்க்கையை எந்த அளவுக்கு ரசிக்கிறீர்கள்? இங்கே உங்கள் மனம் கவர்ந்த அம்சம் என்னென்ன?”

“”ஐயா இதுபோன்ற தூசியும், தும்பும் நிறைந்த ஒரு நகரத்தில், ஒரு மனிதனால் எப்படித்தான் வாழ முடியுமோ தெரியவில்லை. எனக்கு என்னவோ மூச்சுவிடவே கஷ்டமாக இருப்பது மாதிரி இருக்கிறது. நான் 120 வயது வரையிலாவது உயிர் வாழ முடியும் என்று கிராமத்திலிருக்கும் போது நம்பிக்கை இருந்தது.

“”இங்கே வந்த பிறகு ஓர் ஆறு மாதம் உயிரோடு இருக்க முடியுமா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மக்களுடைய நடைஉடை பாவனை போன்ற எல்லாவற்றிலும் முட்டாள்தனத்தைத் தான் காண முடிகிறது.

“”பத்து வயது சிறுவனிலிருந்து 50 வயது மனிதர் வரை எவ்வளவு இறுக்கமான லினன் உள்ளாடை அணிகின்றனர். காற்றோட்டமாகவும், ஆரோக்கியமாகவும் தளதளவென முழுஆடை அணிந்தவர் ஒருவர் கூடக் காண முடியவில்லையே… வெட்கக்கேடு!” என்றார் தாத்தா.

“”உங்கள் கிராமத்தில் காண முடியாத ரயில் – பஸ்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இவை மிகவும் வசதிகரமான, சுகமான போக்குவரத்து சாதனங்கள் அல்லவா?” என்று நிருபர் கேட்டார்.

“”அவையென்ன போக்குவரத்துச் சாதனங்களா? ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையா? கொஞ்சமாவது அமைதியாக, நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறதா? ஆயிரந்தான் சொல்லுங்கள்… கிராமத்தில் கழுதையின் மீது பயணம் செய்யும் சுகம் வருமா?” என்றார் தாத்தா.

“”அது கிடக்கட்டும். எங்கள் நகரத்து சினிமா, நாடகம் போன்ற பொழுது போக்கு நிலையங்கள் கூட உங்கள் மனத்தைக் கவரவில்லையா?” என்று கேட்டார் நிருபர்.

“”அவையெல்லாம் மனிதர்களைப் பைத்தியக்காரர்களாக்கிவிடும்!” என்றார் தாத்தா.

“”எங்கள் நகரத்து உணவு வகைகள் கூட உங்களுக்கு ருசிக்கவில்லையா?” என நிருபர் வினவினார்.

“”ஊசிப்போன, தீய்ந்துபோன பதார்த்தங்களை முள்கரண்டிகளால் அள்ளிச் சாப்பிட்டுவிட்டால் போதுமா? எங்கள் கிராமத்தின் ஆரோக்கியமான பழைய அமுதுக்கு இது ஈடாகுமா?” என்று கேட்டார் தாத்தா.

“”எங்கள் நகர நவீன சாதனமான எரிவாயு, மின்சாரம் இவையெல்லாம் கூட எங்கள் மனத்தைக் கவரவில்லையா?” என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.

“”தம்பி…” என்று நிருபரை உரிமையோடு விளித்தார் தாத்தா.

“”வாழ்க்கையின் சிறப்புக்களைப் பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? எங்கள் கிராமத்தில் நான் சொக்கப்பானை கொளுத்தினால் எவ்வளவு குஷியாக இருக்கும் தெரியுமா? நாங்கள் வெறும் கணப்புக்கு என்று மட்டும் தயார் செய்வதில்லை. ஏதாவது காரணத்துக்குத் தீமூட்டினால் அது எல்லாவித வேலைகளுக்கும் பயன்படுவதாக இருக்கும். வெளிச்சத்துக்கு வெளிச்சம்; கதகதப்புக்கு கதகதப்பு; சமையலுக்கு நெருப்பு. இப்படிப் பலவிதமான பயன்கள்.

“”இங்கே எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் சிறு அடுப்பு மூட்டினால் போதும். பேரன் அனுமதி கொடுத்தால் இப்போதே அடுப்பை மூட்டி விடுவேன். அந்த அடுப்பு ஒன்றே வீட்டுக்கு வெளிச்சமாகவும், குழம்பு, கறி வைப்பதற்கான தீயாகவும், கணப்பாகவும் பயன்பட்டுவிடும். தனித்தனியாக எரிவாயு, கணப்பு, அடுப்பு, விளக்கு என்று வீணாக ஏன் செலவு செய்ய வேண்டும்? அந்த அடுப்பிலே வைக்கும் கறி குழம்புக்கு உங்கள் சிற்றுண்டிக்கான குழம்பு ஈடாகுமா?”

நிருபர் அதற்குப் பிறகு எத்தனையோ வினாக்களை எழுப்பிவிட்டார். என்ன வினா எழுப்பினாலும் நகர்ப்புறங்களைப் பற்றி தாத்தாவுக்கு நல்ல அபிப்பிராயமே ஏற்படவில்லை. கிராமப்புறங்கள்தான் சொர்க்கம், நகர்ப்புறங்கள் அனைத்தும் நரகம் என்று அவர் வர்ணிக்கத் தொடங்கிவிட்டார்.

நிருபர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது, தாத்தா அவரிடம் "இந்த நரகமாகிய நகரத்தில் இருக்கவே மனம் ஒப்பாதே. எப்பொழுது சொர்க்கமாகிய உங்கள் கிராமத்துக்குப் புறப்படப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.

“”கிராமத்துக்கா? இனிமேல் கிராமத்தைப் பற்றி எங்கே சிந்திப்பது? மிச்ச காலத்தை நகரத்திலேயே கழித்துவிடப் போகிறேன்!” என்றார் நிருபர்.


என் அன்பு வாசகரே,
ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டு, அதன்பின்னர் அதிலிருந்து விடுபட நாம் நினைத்தாலும் நம்மால் விடுபட முடியாது என்பதே இக்கதையின் கருத்து.

இக்கதையில் அந்த நிருபருக்குப் பட்டணத்து வாழ்க்கை விட்டு வாழ முடியாத நிலை காரணம் அவரை அறியாமல் பட்டணத்து வாழ்க்கையோடு ஒன்றி போனதுதான். 

பாவமும் அதுபோலத்தான் நாம் செய்ய வேண்டாம் என்று தான் எண்ணுவோம் ஆனால் நம்மையும் அறியாமல் அந்த பாவத்தில்தான் மறுபடி மறுபடி விழுந்துகிடப்போம். அந்த பாவத்தோடு நாம் ஒன்றிபோனதால் நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

இதற்கு என்னத்தான் வழி என்றால் இயேசு ஒருவர் மட்டும் தான் வழி. வேதம் சொல்கிறது

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபிரேயர் 12:1

எனவே நாமும் நம்மை நெருங்கி நிற்கிற பாவத்தை தள்ளிவிட்டு தேவனை நோக்கி ஓடுவோம் தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.

#நீங்கள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!


Friday 3 January 2020

தூசியைப் போல

இன்றும், நமக்குகிடைத்த உறவுகளை நாம் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இக்குட்டிக்கதை மூலம் காண்போம்.

ஜெபராஜும் அருணும் நண்பர்கள். வகுப்பில் இருவருக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெபராஜ் மீதுதான். அதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்களாகவே தனியாகப் பள்ளி செல்லும் அருணிடம் காரணம் கேட்டார் அம்மா. அவன் நடந்ததைக் கூறினான்.

“என் கணக்கு நோட்டை ஜெபராஜ் வாங்கிட்டுப் போனான். மறுநாள் பள்ளிக்கு நோட்டைக் கொண்டு வர மறந்துவிட்டான். அதனால் கணித வகுப்பு முழுவதும் நான் வெளியில் நின்றேன். செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்த கோபத்தில் அவனைத் திட்டினேன். அதிலிருந்து அவன் என்னுடன் பேசுவதில்லை… நானும் பேசவில்லை…’ என்றான் அருண்.

“உன்னோட நண்பன் தானே! நீதான் விட்டுக் கொடுத்துப் போகக்கூடாதா?’ என்றார் அம்மா.

“தப்பு செய்த அவனே என்னிடம் பேசாமல் இருக்கும்போது, நான் ஏன் அவனிடம் பேச வேண்டும்?’ என்று எதிர்க்கேள்வி கேட்டான் அருண்.

“சரி, உங்க சண்டையை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு உங்க தாத்தா, பாட்டி வர்றாங்க. பரண் மேலே போட்டு வச்சிருக்க பாத்திரங்களை எடுத்துக் கொடு. நாளைக்குத் தேவைப்படும்’ என்றார் அம்மா.

நாற்காலி ஒன்றைப் போட்டு, அதன் மேல் எறி நின்று ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துக் கொடுத்தான் அருண்.

“அய்யோ! பாத்திரமெல்லாம் ஒரே தூசியாய் இருக்கிறது. இப்ப என்ன பண்றது?’ வருத்தம் மேலிடக் கேட்டார் அம்மா.

“இதுல என்னம்மா பிரச்னை? தூசியைத் துடைத்துவிட்டு, கழுவி பயன்படுத்த வேண்டியதுதானே!’ என்றான் அருண்.

“அதே மாதிரிதான் உன் நல்ல நண்பன். தூசியைப் போல சின்ன தவறு செஞ்சிட்டான். அதை மன்னித்துப் பேச வேண்டியதுதானே!’ என்றார் அம்மா.

அருணுக்குத் தனது தவறு விளங்கியது.

“சரியாச் சொன்னீங்க அம்மா! சின்ன தவறுக்காக நல்ல நண்பனை இழக்க இருந்தேன். இப்பவே ஜெபராஜ் வீட்டுக்குப் போய் வீட்டுப் பாடம் எல்லாம் செஞ்சிட்டு வர்றேன்’ என்றபடி உற்சாகமாக ஓடினான் அருண்.

என் அன்பு வாசகர்களே,
இவ்வுலகத்தில் பணம், பொருள் எல்லாவற்றையும் சம்பாதித்து விட முடியும் ஆனால் நமக்கு கிடைக்கின்றன நம்பிக்கையான உறவுகளை அவ்வளவு எளிதில் சம்பாதித்து விட முடியாது. நமது சம்பாத்தியம், பணம், பொருள் எல்லாம் ஒரு நாளில் நம்மை விட்டு விலகினாலும் நம்மை உண்மையாய் நேசிக்கிற உறவுகள் எத்தனை கஷ்டம் வந்தாலும் நம்மைவிட்டு பிரியாது.

ஒருவரது நட்பையாவது உறவையாவது முறித்து விடுவது எளிது அதுவே அந்த நட்பை வளர்த்துக் கொள்வது மிகவும் கடினமான விஷயம். 

தேவனும் நம் மீது அன்பு கொண்டபடியால் தான் நம்மீது பாவம் இருந்த போதும் அதை பொருட்படுத்தாது இவ்வுலகில் வந்து நமக்காய் மரித்து மீண்டும் உயிரோடு எழுந்து நம்மை பரலோகில் சேர்க்க மீண்டும் வரப்போகிறார். எனவே நாம் அவரை எதிர்க்கொண்டு போக மற்றவர் மீது அன்போடும் அரவனைப்போடும் வாழ்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:4 - 8

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!


Thursday 2 January 2020

தன்னலமற்ற சேவை

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை சார்லஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம். இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார். சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. 

மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய கல்வெட்டு ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான். அன்று இரவு அரசன் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற கல்வெட்டும் இருந்தது. இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான் நேரே கோயிலுக்குச் சென்றான் கல்வெட்டைப் பார்த்தான் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது ஆம் அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. "இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!' என்று வேதனையடைந்தான்.

காவலர்களை அனுப்பி அந்தசக் கல்வெட்டில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தக்  கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், "அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?'' என்று கேட்டான். கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு கல்வெட்டைப் பார்த்தாள். பிறகு, "ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்.... தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!''

இல்லை அம்மா, "என் பெயர் தான் முதலில் அந்தக்  கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை'' என்றான் அரசன்.
நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை.... அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது? என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

தாயே, "இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!'' என்றான் அரசன். நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, மன்னா! "இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது'' என்றாள் கிழவி.

தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார்.  "தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!'' என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய இளம் ஊழியர்கள் அநேகர் தாங்கள் புதிதாய் ஒரு இடத்திற்கு சென்று ஊழியம் செய்து  அங்கு புதிய சபைகளைக் கட்டி அநேக ஜனங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்று தேவனை ஆராதிப்பதினால் யாரும் சாதித்திராததை சாதித்து விட்டது போல எண்ணுகிறார்கள். மேலும் அவர்களால் தான் அந்த ஊழியம் வளர்ச்சி அடைந்தது என்றும் அவர்கள் பெயர் பிரபலமடைய வேண்டும் என்பதே அவர்களின் சிந்தை.

ஆனால் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும், இவ்வளவு எளிதாய் ஒரு சபை கட்டப்பட வேண்டுமெனில் அந்த இடத்தில் இவர்கள் ஊழியம் செய்ய செல்வதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன் யாராகிலும் தேவனுடைய ஊழியத்தை மிகுந்த சிரமத்தோடும், கஷ்டத்தோடும் அந்த இடத்தில் சென்று பசியோடும், பட்டினியோடும் ஊழியம் செய்த முகாந்திரம் தான் உங்கள் ஊழியம் இவ்வளவு எளிதானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த ஒரு காரியமும் எளிதில் நடந்து விடாது அதற்கு ஈடாக எதையாகிலும் நாம் செய்தால் மட்டுமே அதற்குரிய பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஈடாக செலுத்துவதற்கு பதில் நம் முன்னோர்கள் செலுத்தியுள்ளதின் பலன் தான் இன்று அனுபவித்துக் கொண்டு இருப்பது. மேலும் பலர் தங்கள் பெயர் பிரஸ்தாபத்திற்காக தங்கள் பெயரை சூட்டி தங்கள் பெயரை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். 

அது மாத்திரமல்ல நாம் அனுபவிக்கின்ற இந்த வீடு, ஆஸ்தி என எல்லாம் நம் பெற்றோர்கள் தங்களை வருத்தி மிகுந்த பிரயாசப்பட்டு நம்மை சுகமாய் வாழ வழிவகுத்து கொடுத்ததுதானே அல்லாமல் நாம் எந்த பிரயாசமும் அதில் செலுத்தவில்லை. எனவே நாமும் நம்முடைய பெயர் பிரஸ்தாபத்திற்கு என்று வேலை செய்யாமல் நம்மால் இயன்றதை நம் குடும்பத்திற்கும், ஊழியத்திற்கும் செய்வோம் தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.  பிலிப்பியர் 2:21

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!


Wednesday 1 January 2020