Search This Blog

Saturday 6 August 2011

தெசலோனிக்கே ஒரு அறிமுகம்

தெசலோனிக்கே என்பது மக்கெதோனியா நாட்டின் மிகப் பெரிய கடற்கரைப் பட்டிணம். கி.பி.49 க்கும் 54க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பவுல் தனது முதலாம் நிருபத்தை தெசலோனிக்கேயருக்கு எழுதுகிறார். இந்நிருபம் கொரிந்து பட்டிணத்திலிருந்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. பவுலின் இரண்டாம் மிஷனரி பயணத்தின் போது இப்பட்டணத்தில் சபை நிறுவப்பட்டது. ஆனால் பயங்கரமான எதிர்ப்பின் காரணத்தால் (அப் 17:1-10) பவுலும், சீலாவும் இப்பட்டிணத்தை விட்டு வேகமாக வெளியேற நேர்ந்தது. பின்பு இச்சபையாரின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிய பவுல் தீமோத்தேயுவை அனுப்புகிறார்.

முதலாம் நிருபம் எழுதிய பிறகு மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டாம் நிருபத்தை எழுதினார். தெசலோனிக்கேயர் இன்னும் உபத்திரவங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், கர்த்தரின் நாளைப் பற்றிய உபதேசங்கள் தவறாய்ப் போதிக்கப்பட்டிருந்தாலும் பவுல் இவ்விரண்டாம் நிருபத்தை எழுதினார்.

இவ்விரு நிருபங்களுக்குள் பல வேற்றுமைகள் இருப்பதை வேத அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். முதலாம் நிருபத்தைவிட இரண்டாம் நிருபம் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. முதலாம் நிருபத்தில் கர்த்தருடைய வருகை திருடனின் வருகையைப் போலிருக்கும். (1.தெச.5:2) என்றும் இரண்டவது நிருபத்தில் கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் சில காரியங்கள் நடைபெறும் (2 தெச.2:1-4) என்று பவுல் கூறுகிறார். முதல் நிருபம் தெசலோனிக்கே பட்டணத்து சபையிலிருந்த புற ஜாதிகளுக்கு எழுதப்பட்டது என்றும் இரண்டாம் நிருபம் அச்சபையிலிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

வேறுபாடுகள் பல இருப்பினும், உபத்திரப்படுகின்ற கிறிஸ்துவர்களை உற்சாகப்படுத்துவதாயும், மற்றவர்களை (யூதர்களை) கர்த்தரின் நாளைப் பற்றிக் கூறி எச்சரிப்பதாகவும் இந்நிருபங்களில் காணப்படுகின்றன. இனி வரும் சில நாட்கள் இந்நிருபங்களைப் பற்றி நாம் தியானிக்கும் போது உற்சாகமடைவோம். கர்த்தரின் நாளுக்காக ஆயத்தப்படுவோம்.

No comments:

Post a Comment