Search This Blog

Sunday 1 January 2012

ஆதியாகமம்

ஆதியாகமம் "துவக்கங்களின் புத்தகம்" என அழைக்கப்படுகிறது. ஆதியாகமம் என்ற பெயர் "செப்துவஜிந்து" எனும் கிரேக்க வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை, மனுக்குலம், குடும்பம், பாவம், மீட்பு, மொழி, கலாச்சாரம், தேவ ஜனமாகிய இஸ்ரவேலர் போன்ற துவக்கங்களின் வரலாறு இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மொத்த அதிகாரங்கள் : 50


மொத்த வசனங்கள் : 1533


ஆசிரியர் : "மோசே " என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட காலம் : எகிப்திலிருந்து மோசேயின் தலைமையில் இஸ்ரவேலர் புறப்பட்ட காலத்திற்குப் பின், மோசேயின் மரணத்திற்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. சுமார் கி.மு.1445 - கி.மு.1405. கற்பனைக்கும் அப்பாற்பட்ட காலத்திலிருந்து, சுமார் கி.மு.1804 ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.


ஆதியாகமம் நிகழ்வுகளை 3 காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.


1) மெசபத்தோமியாவில் நடந்தவை : ஆதி 1-11 - (துவக்கமுதல் (படைப்பு) சுமார் கி.மு.2090 வரை).

2) கானானில் நடந்தவை : ஆதி 12- 36. - (சுமார் கி.மு.2090 முதல் 1897 வரை)

3) எகிப்தில் நடந்தவை : ஆதி 37- 50. - ( சுமார் கி.மு.1897 முதல் 1804 வரை)


எழுதப்பட்ட நோக்கம் : இன்றைய உலகில் நாம் காணும் அனைத்தும் கர்த்தரால் துவங்கப்பட்டவையே என்பதை வலியுறுத்தும் புத்தகம் இது. இன்றும் கர்த்தரின் அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் எதையும் துவங்க இயலாது என்பதை இப்புத்தகம் எடுத்தியம்புகிறது.

சிறப்பாக, கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்ற தெரிவு செய்யப்பட்ட இஸ்ரவேலரின் வரலாறு இப்புத்தகத்தில் துவங்குகிறது.

பகுப்பு : 1:1-2:3 - படைப்பின் வரலாறு 2:4-5:32 - ஆதாமின் வரலாறு 6:1-11:32 - நோவாவின் வரலாறு 12:1-25:18 - ஆபிரகாமின் வரலாறு 25:19-28:9 - ஈசாக்கின் வரலாறு 28:10-36:43 - யாக்கோபின் வரலாறு 37:1-50:26 - யோசேப்பின் வரலாறு


இப்புத்தகத்தின் முதல் பகுதியில் (1-11 அதிகாரங்கள்) 4 முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பு, வீழ்ச்சி, பாவம், ஜலப்பிரளயம், பாபேல் கோபுரம் ஆகியவைகளின் வரலாறுகள் உள்ளன.

ஆதியாகமத்தின் பின் பகுதியில் ( 12-50 அதிகாரங்கள்) 4 நபர்களை குறித்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகிய 4 முற்பிதாக்களின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன.


இப்புத்தகம் எனக்கு கூறுவது என்ன?

நம் தேவன் "துவக்கங்களின் தேவன் என்பதை கற்றுக்கொடுக்கிறது. எந்நிலையிலும் கர்த்தரிடம் வரும் எவருடைய வாழ்விலும் புதியவைகளைத் துவங்க இயலும்.

இன்றும், நம் வாழ்வுக்கும், வாழ்வின் ஆதாரங்களுக்கும் "துவக்கம்" கர்த்தரிடத்தில் மட்டுமே உள்ளது என்பதை இப்புத்தகத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ள இயலும்.

No comments:

Post a Comment