Search This Blog

Wednesday 4 January 2012

எண்ணாகமம்

வேதாகமத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் நான்காம் நூலாக அமைந்தது எண்ணாகமம் ஆகும். இஸ்ரவேல் மக்கள் எண்ணிப் பார்க்கப்ப்படபடியால் இப்புத்தகம் எண்ணாகமம் என அழைக்கப்படுகிறது. லத்தின் மொழியில் "numeri" எனும் வார்த்தையிலிருந்து இத்தலைப்பு உருவானது.

சீனாய் மலையிலிருந்து சுமார் 10 நாட்களின் பயண குறிப்புகளும், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

மேலும் காதேஸ்-பர்னேயாவில் இஸ்ரயேலருக்கு நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கர்த்தருக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கர்த்தர், மக்கள்மேல் அக்கறைகொண்ட் அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. அதுபோன்று, கர்த்தருக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

ஆசிரியர் : மோசே எனக் கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் : சுமார் கி. மு 145-1410
மொத்த அதிகாரங்கள் : 36
மொத்த வசனங்கள் : 1288
திறவுகோல் வசனம் : 14:22,23.
நூலின் பிரிவுகள்:1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல். - எண்ணாகமம் 1:1 - 9:23
அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு. - எண்ணாகமம் 1:1 - 4:49
ஆ) சட்டங்களும் விதிமுறைகளும். - எண்ணாகமம் 5:1 - 8:26
இ) இரண்டாம் பாஸ்கா. - எண்ணாகமம் 9:1-23
2. சீனாய் மலை முதல் மோவாபு வரை. - எண்ணாகமம் 10:1 - 21:35
3. மோவாபில் நிகழ்ந்தவை. - எண்ணாகமம் 22:1 - 32:42
4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம். - எண்ணாகமம் 33:1-49
5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள். - எண்ணாகமம் 33:50 - 36:13

எழுதப்பட்ட நோக்கம் : கர்த்தர் தம் மக்கள் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பதையே எதிர்பார்க்கிறார். அவிசுவாசம் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவிசுவாசம் மற்றும் அவிசுவாசத்தினால் உண்டாகும் எதிர்த்து செயல்படுதல் போன்ற பண்புகளினால் ஏற்படும் விளைவுகளை கற்றுக் கொடுக்க இப்புத்தகம் உருவானது.
சிறப்புக் குறிப்புகள் : இப்புத்தகத்தில் இஸ்ரவேலர் இரண்டு முறை எண்ணிப் பார்க்கப்பட்டனர். இருபது வயதுக்கு அதிகமான ஆண் மக்கள் அனைவரும் கணக்கிடப்பட்டனர். 1:46 இன் படி முதல் கணக்கெடுப்பின் படி 6,30,550 பேர் எனவும் இரண்டாம் கணக்கெடுப்பின் படி (26:41) 6,01,730 பேர் என்பதையும் அறியலாம். 38 வருடங்கள் 38 மாதங்கள் நடந்த நிகழ்வுகள் தொகுக்கப்படுள்ளதாக வேத ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வனாந்தரத்தில் என்ற சொல் 48 தடவைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
எனக்குரிய செய்தி : தம் மக்கள் தன் மீதுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தி வாழ வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் அவிசுவாசத்தினால் நம் வாழ்வில் மிகப் பெரிய எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற உண்மையை இப்புத்தகம் கற்றுக்கொடுக்கிறது. அவிசுவாசத்தினால் கர்த்தர் அருளும் நல் ஆசிர்வாதங்களை இழக்க நேரிடும் என்பதை இப்புத்தகம் தெளிவாக கூறுகிறது. கீழ்படிதல் விசுவாசித்தல் இவை தவிர கர்த்தரின் நன்மைகளை பெற்றிட குறுக்கு வழிகள் இல்லவே இல்லை.

No comments:

Post a Comment