Search This Blog

Tuesday 3 January 2012

லேவியராகமம்

திருமறையின் 3ம் புத்தகம் இது. இப்புத்தகம் "பிரமாணங்களின் புத்தகம் "என அழைக்கப்படுகிறது. திருப்பணியாற்ற கர்த்தரால் நியமிக்கப்பட்ட லேவியர்கள் குறித்த செய்திகள் அதிகமாக இடம் பெறுவதால் , இப்புத்தகம் லேவியராகமம் என அழைக்கப்படுகிறது. இப்பிரமாணங்களின் புத்தகத்தில் தெய்வ மக்களுக்குரிய கர்த்தரின் எதிர்பார்ப்புகள் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர் : மோசே என கருதப்படுகிறது.
காலம் : சுமார் கி.மு. 1445 - 1444. (சீனாய் மலையருகே தங்கியிருந்த ஒரு மாத காலத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம் )
மொத்த அதிகாரங்கள் : 27
மொத்த வசனங்கள் : 859
திறவுகோல் வசனம் : 19:2

எழுதப்பட்ட நோக்கம் : திருப்பணிக்கென நியமிக்கப்பட்ட ஆசாரியர்கள் லேவியர்கள் ஆகியோரின் பொறுப்புகள் . இப்பணி செய்வதற்குரிய தெய்வ எதிர்பார்புகளை இப்புத்தகம் உள்ளடக்கியது . மேலும் , இஸ்ரவேலரிடம் காணப்பட வேண்டிய இறை பண்புகளையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

சிறப்பு குறிப்புகள் : 5 விதமான பலிகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 1. சர்வாங்க தகனபலி 2. போஜனபலி 3. சமாதானபலி 4. பாவநிவாரண பலி 5. குற்ற நிவாரண பலி .
இவற்றில் முதல் 3 பலிகளும் காணிக்கையாக செலுத்தப்பட சுகந்த வாசனையான பலிகள் என அழைக்கலாம் . அடுத்த 2 பலிகளும் நம் வாழ்வில் இடம் பெறும் பாவம் , குற்றத்திற்கான பிராயச் சித்தமாக கருதப்பட்டது .

7 பண்டிகைகளைப் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன .
1. பஸ்கா பண்டிகை (23:5)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை(23:6)
3. முதற்பலன்களின் பண்டிகை (23:10)
4. பெந்தெகோஸ்தே பண்டிகை (23:16)
5. எக்காளப் பண்டிகை (23:24)
6. பிராயச்சித்த பணடிகை (23:27)
7. கூடாரப்பண்டிகை (23:34)

இப்பண்டிகைகளில் புளிப்பில்லா பண்டிகையும் , கூடரப்பண்டிகையும் ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டன. பெந்தெகோஸ்தே பண்டிகை அறுவடை பணடிகை எனவும் அழைக்கப்படுகிறது . கர்த்தர் மோசேயை நோக்கி என்ற சொற்றொடர் 28 முறை இடம் பெற்றுள்ளது . இப்புத்தகத்தின் முக்கியமான பரிசுத்தம் என்ற வார்த்தை 87 தடவை இடம் பெற்றுள்ளது . மேலும் பலி 52 முறை , ஆசாரியர் 189 முறை , இரத்தம் 86 முறை பாவநிவாரணம் 45 முறை இடம் பெற்றுள்ளது.

இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் பரிசுத்த வாழ்வுக்கான கட்டளைகள் இடம் பெற்றுள்ளன . குடும்ப உறவுகள் மற்றும் பொறுப்புகள் , பாலியல் சார்ந்த கட்டளைகள் போன்ற முக்கிய நடைமுறை ஆலோசனைகள் உள்ளன . இவை இக்காலத்திலும் மிகவும் பொருத்தமானவை என்பதில் ஐயமில்லை .

பகுப்பு : 1:1-17:16 பரிசுத்த கர்த்தரை ஆராதிப்பது எப்படி ?
18:1-27:34 பரிசுத்தமாய் வாழ்வது எப்படி ?
1:1 - 10:20 கர்த்தரை சென்றடைவது எப்படி ?
11:1 - 27:34 கர்த்தரோடு வாழ்வது எப்படி ?

எனக்குரிய செய்தி :
பரிசுத்த கர்த்தரை ஆராதிக்க நாம் பேறு பெற்றவர்கள் எனலாம் . தம் மக்களின் வாழ்க்கை எப்படி காணப்பட வேண்டும் என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது . கிறிஸ்தவ வாழ்வு நியமங்கட்கு உட்பட்டதாகும். இத்தகைய பிரமாணங்களுக்கு அல்லது கர்த்தரின் எதிர்பார்ப்புக்கு உட்பட்டதாக என் வாழ்வு காணப்படுகிறதா என ஆய்வு செய்தல் அவசியமாகும் . தெய்வ நியமங்களை ஏற்று வாழும் வாழ்வில் மகிழ்ச்சி உண்டு . மேலும் சாட்சி வாழ்வைக் காண்பிப்பதின் வழியாக பிறரையும் இயேசு கிறிஸ்துவின் அன்பிற்குள் அழைத்து வர இயலும் என்பது நிச்சயமே .

No comments:

Post a Comment